ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் சென்று கல்லூரி பேராசிரியை பலாத்காரம்... உடற்கல்வி இயக்குநர் கைது!
கோவையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவரை ஊட்டிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் (33) என்பவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர், அதே கல்லூரியில் பணியாற்றும் 30 வயது பேராசிரியை ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பேராசிரியையை ஊட்டிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்ற குமரேசன், அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனிடையே, குமரேசனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யக் குடும்பத்தினர் ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த பேராசிரியை, தன்னை ஏமாற்றியது குறித்துக் குமரேசனிடம் கேட்டுள்ளார். அப்போது, இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் உன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் குமரேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த பேராசிரியை, உடனடியாகக் கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் நடந்ததால், இந்த வழக்கு விசாரணைக்காக ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த காவல்துறையினர், பாலியல் வன்கொடுமை மற்றும் பட்டியலினத்தவர்/பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, உடற்கல்வி இயக்குநர் குமரேசனைக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.