கல்லூரி மாணவி பாலியல் புகார்... டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அபிஷேக்கைக் கைது செய்ய உத்தரவு!
மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் அபிஷேக் போரலை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி காவல்துறையில் அளித்துள்ள புகாரில் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் தன் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனியாக இருக்கும் போது எடுக்கப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி அவர் தன்னிடம் மிரட்டல் விடுத்ததாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். இளம்பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அபிஷேக் போரலைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவர் மீது அடுத்தகட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.