சுற்றுலா செல்ல பெற்றோர் அனுமதிக்காததால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை - கோவையில் சோகம்!

 

கோவையில் பெங்களூரு சுற்றுலா செல்லப் பெற்றோர் அனுமதி மறுத்த மனவேதனையில், பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குரும்பம்பாளையத்தைச் சேர்ந்த மயில்சாமியின் மகள் பூர்வஜா (20), அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் பயிலும் மாணவர்களுடன் பெங்களூருவுக்குச் சுற்றுலா செல்ல அவர் தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், பெற்றோர் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

பெற்றோரின் மறுப்பால் மனமுடைந்து கோபத்துடன் தனது அறைக்குச் சென்ற பூர்வஜா, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வடவள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.