கல்லூரி மாணவர் பலி... சென்னையில் பைக் ரேஸ் விவகாரத்தில் 7 பேர் கைது - 56 வாகனங்கள் பறிமுதல்!
சென்னையின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் விதிகளை மீறி நள்ளிரவில் பைக் பந்தயம் மற்றும் சாகசங்களில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 7 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று நள்ளிரவு நுங்கம்பாக்கம், ஜெமினி பாலம், கோடம்பாக்கம் மற்றும் ஐஐடி மேம்பாலம் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிக சத்தம் எழுப்பியவாறு பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த பைக் பந்தயத்தின்போது, ஐஐடி மேம்பாலத்தில் இருந்து குகன் (21) என்ற கல்லூரி மாணவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விபத்துக்குள்ளான பைக்கை உடன் வந்தவர்கள் எடுத்துச் சென்றது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளுவர் கோட்டம் சிக்னல் அருகே இளைஞர்கள் பெருமளவில் திரண்டு சாகசங்களில் ஈடுபட்டதைக் கண்டித்தும், பைக் ரேஸுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் பொதுமக்கள் திடீரெனச் சாலை மறியலில் ஈடுபட்டு ரோந்துப் போலீசாரை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; விதிகளை மீறி இயக்கப்பட்ட 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பைக் ரேஸில் சிறுவர்கள் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகரக் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், இதுபோன்ற விதிமீறல்கள் குறித்த புகார்களை 100 அல்லது 90031 30103 என்ற எண்களுக்குத் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.