கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிக் கல்லூரி மாணவர், மாணவி பலி!
சென்னை எண்ணூர் கடற்கரையில் சக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, பொறியியல் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஆகாஷ் (20 - பொறியியல் 2-ம் ஆண்டு) மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கிருத்திகா (21 - பொறியியல் 3-ஆம் ஆண்டு). இருவரும் சூரப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பயின்று வந்தனர். கல்லூரி விடுமுறை நாளான நேற்று, இருவரும் தங்களது கல்லூரியைச் சேர்ந்த மேலும் 3 நண்பர்களுடன் சேர்ந்து எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது ஆகாஷ், கிருத்திகா மற்றும் அவர்களது நண்பர் ஒருவர் என மூன்று பேரும் சேர்ந்து கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். மற்ற இரு நண்பர்கள் கரையில் நின்றபடி அவர்களைத் தங்களது செல்போனில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழும்பிய ராட்சத அலை, எதிர்பாராதவிதமாகக் கிருத்திகா மற்றும் ஆகாஷ் இருவரையும் ஆழமான கடற்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மீனவர்கள் உடனடியாகக் கடலில் குதித்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்:
கிருத்திகாவை மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
கடலில் மாயமான ஆகாஷைத் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரது உடலும் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இருவரின் உடல்களையும் மீட்ட எண்ணூர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் இந்த திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.