போலி சாமியாரிடம் சிக்கிய கல்லூரி மாணவி - விபரீத முடிவு!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திறமையான புல்லாங்குழல் கலைஞர் ரேணுகா (25), புனே மாவட்டம் முல்ஷி பகுதியில் உள்ள ஆன்மீக இசைப் பள்ளியில் முதுகலை படித்து வந்தார். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ரேணுகாவுக்கு இருந்த சில தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடி, சமூக வலைதளம் மூலமாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சாமியாரைத் தொடர்பு கொண்டுள்ளார். ரேணுகாவின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் போலி சாமியார், "உன் பிரச்சனைகள் தீர வேண்டுமானால், சுடுகாட்டில் வைத்துப் பெரிய மாந்திரீக பூஜை செய்ய வேண்டும்" எனக் கூறி நம்ப வைத்துள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ரேணுகா, ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை பல்வேறு தவணைகளாகச் சுமார் ரூ.74,000 அந்தச் சாமியாரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ரேணுகாவிடம் இருந்த மொத்தப் பணத்தையும் பறித்த பிறகும், அந்தப் போலி சாமியார் விடவில்லை.
"மேலும் பணம் அனுப்பவில்லை என்றால், உனக்கும் உன் தாய்க்கும் பெரிய விபரீதம் ஏற்படும், உங்கள் உயிர் பறிபோகும்" என மாந்திரீக ரீதியாக மிரட்டியுள்ளார்.
ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த ரேணுகா, சாமியாரின் தொடர் மிரட்டலால் பயந்து போய், தனது விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ரேணுகாவின் அறையில் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பணப் பரிவர்த்தனைகள் மற்றும் செல்போன் உரையாடல்கள் மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
வழக்குப்பதிவு: அடையாளம் தெரியாத அந்தப் போலி சாமியார் மீது 'தற்கொலைக்குத் தூண்டுதல்' உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்தச் சாமியாரைப் பிடிக்கப் புனே போலீசார் தற்போது ராஜஸ்தானுக்கு விரைந்துள்ளனர். ஆன்லைன் மூலம் பரப்பப்படும் போலி ஆன்மீக விளம்பரங்களை நம்பிப் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.