அரசு வேலை, சொத்துக்காக தாயைக் கொன்ற கல்லூரி மாணவி - தந்தையின் மரணத்திலும் திடுக்கிடும் திருப்பம்!
சொத்து மற்றும் கருணை அடிப்படையிலான அரசு வேலைக்கு ஆசைப்பட்டு, பெற்ற தாயையே கார் ஏற்றிப் படுகொலை செய்த சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி உட்பட 6 பேரை ராஜஸ்தான் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரது தந்தையின் மரணத்திலும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்த விஜய் சர்மா என்பவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி நீரஜ் சர்மாவுக்குக் கருணை அடிப்படையில் அதே நீதிமன்றத்தில் எழுத்தர் பணி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி நீரஜ் சர்மா சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவர் மீது அதிவேகமாக வந்த 'ஸ்கார்பியோ' கார் ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நீரஜ் சர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண சாலை விபத்து என நினைக்கப்பட்ட நிலையில், போலீஸாரின் தீவிர விசாரணையில் இது திட்டமிட்ட படுகொலை என்பது அம்பலமானது.
நீரஜ் சர்மாவின் மரணத்தின் பின்னணியில் அவரது சொந்த மகளான ஆயுஷி இருப்பது போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஆயுஷி சட்டக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. தாயின் மறைவுக்குப் பிறகு கருணை அடிப்படையில் கிடைக்கக்கூடிய நீதிமன்ற அரசு வேலை மற்றும் குடும்பத்திற்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ள அவர் சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்காக வாடகை கொலையாளிகள் மற்றும் நண்பர்கள் சிலரைத் திரட்டி, தனது தாய் மீது ஸ்கார்பியோ காரை ஏற்றி விபத்து போல நாடகமாடிக் கொன்றுள்ளார். இந்தத் துரோகம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, முதன்மைக் குற்றவாளியான மாணவி ஆயுஷி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தாயைக் கொன்ற வழக்கில் மகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் மற்றொரு திடுக்கிடும் திருப்பமாக ஆயுஷியின் தாய் மாமன் போலீசாரிடம் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் மர்மமான முறையில் உயிரிழந்த தனது அக்கா கணவர் விஜய் சர்மாவின் மரணத்திலும் ஆயுஷிக்குத் தொடர்பு இருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். சொத்துக்காகத் தாயையே கொன்ற ஆயுஷி தான், கடந்த ஆண்டே தனது தந்தையையும் விஷம் வைத்தோ அல்லது வேறு ஏதேனும் மர்மமான முறையிலோ கொன்றிருக்க வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் திடுக்கிடும் புகாரைத் தொடர்ந்து, விஜய் சர்மாவின் மரணம் குறித்தும் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.