”“துடைப்பத்தால் அடித்து கொடுமை..” பேய் பிடித்திருப்பதாகக் கூறி கல்லூரி மாணவிக்கு சித்திரவதை - சக மாணவிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கிப் பயின்று வரும் முதலாண்டு மாணவிக்கு, அவருடன் தங்கியிருந்த சக மாணவிகளே பேய் பிடித்திருப்பதாகக் கூறித் துடைப்பத்தால் அடித்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலத்தில் உள்ள இதயா மகளிர் பொறியியல் கல்லூரியில் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலாண்டு படித்து வருகிறார். அங்கு விடுதியில் தங்கியிருந்த இவருக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி, உடன் தங்கியிருந்த சக மாணவிகள் 4 பேர் கற்பூரம் ஏற்றி விசித்திரமான முறையில் சித்திரவதை செய்துள்ளனர்.
மேலும், அந்த மாணவிகள் அவரைத் துடைப்பத்தால் அடித்துத் துன்புறுத்தியதுடன், இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாகவும் தீவிர மிரட்டல் விடுத்துள்ளனர்.
தோழிகளின் இந்தத் தொடர் துன்புறுத்தலையும் கொடூரச் செயலையும் தாங்கிக்கொள்ள முடியாத அந்த மாணவி, உடனடியாகக் காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மாணவிக்குத் தொல்லை கொடுத்த அந்த 4 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.