அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் மாணாக்கர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு!
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். மாணாக்கர் நலன் கருதி விண்ணப்பப் பதிவு செய்யத் தவறியவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர் இரண்டாம் கட்ட சேர்க்கைக்குத் தொடர்ந்து விண்ணப்பிக்கும் வகையில் செப்டம்பர் 10-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணாக்கர் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எம்.எட் மாணாக்கர் சேர்க்கைக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பித்த மாணாக்கர்களுக்குச் சேர்க்கைக்கான விவரங்கள் எஸ்.எம்.எஸ் (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) வாயிலாக அனுப்பப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.