காமன்வெல்த்தில் சாதனை படைத்த இந்தியா...  100 மீட்டர் ஓட்டத்தில் திலீப் காவிட் தங்கம்!  

 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இதில் பாரா-அதலெடிக்ஸ் ஆண்களுக்கான 100 மீட்டர் T47 பிரிவில் இந்திய வீரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் திலீப் காவிட் தங்கப் பதக்கத்தையும், சக வீரர் மொகம்மது பாசில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர். ஒரே போட்டியில் இந்தியாவின் இரு வீரர்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து முத்திரை பதித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் திலீப் காவிட் 10.71 வினாடிகளில் இலக்கைக் கடந்து புதிய சாதனையுடன் தங்கத்தைக் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான மொகம்மது பாசில் 10.83 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இரு வீரர்களின் இந்த அதிரடி வெற்றியால் மைதானத்தில் இந்தியக் கொடி கம்பீரமாகப் பறக்கவிடப்பட்டுத் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

சர்வதேச அரங்கில் பாரா விளையாட்டு வீரர்களின் இந்த அபார வெற்றி இந்திய விளையாட்டுத் துறைக்கு மிகப்பெரிய பெருமையைச் சேர்த்துள்ளது.இந்த இரட்டை வெற்றிகளின் மூலம் காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்திய அணி இதுவரை 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாற்றுத்திறனாளி வீரர்கள் படைத்து வரும் இந்தத் தொடர் சாதனைகளுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.