மீனவர்களிடையே பரபரப்பு... கடற்கரையில் கரை ஒதுங்கிய ‘ராக்கெட் லாஞ்சர்’!
செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரை கோட்டை குப்பம் கடற்கரையில், இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ‘டெமோ ராக்கெட் லாஞ்சர்’ ஒன்று கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடல் அலையில் அடித்து வரப்பட்ட மர்மப் பொருளைக் கண்டு அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து வந்து அதனை மீட்டுச் சென்றனர்.
ஆலம்பரை கோட்டை குப்பம் கடற்கரைப் பகுதியில் நேற்று கடல் அலையில் ராக்கெட் லாஞ்சர் போன்ற உருவமைப்பு கொண்ட பொருள் ஒன்று கரை ஒதுங்கிக் கிடந்தது. அதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்து, உடனடியாக உள்ளூர் காவல்துறை மற்றும் கடலோரக் காவல்படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், அந்தப் பொருளை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அந்த ராக்கெட் லாஞ்சரைப் பாதுகாப்பாக மீட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
மீட்கப்பட்ட பொருள் குறித்து இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், “இது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட உண்மையான ஆயுதம் அல்ல; கடலோரக் காவல்படையில் புதிதாகப் பணியில் சேரும் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் டெமோ ராக்கெட் லாஞ்சர்” எனத் தெரிவித்துள்ளனர்.
கடலில் நடைபெற்ற வழக்கமான பயிற்சியின் போது தவறி விழுந்து, கடல் அலையில் அடித்து வரப்பட்டுக் கரை ஒதுங்கியிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இதனால் பொதுமக்களுக்கோ மீனவர்களுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.