"இரக்கம் காட்டுவது தவறான முன் உதாரணம்" - நெல்லையில் 3 சிறுமிகளைப் பலாத்காரம் செய்தவனுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!
நெல்லை மாவட்டத்தில் 3 பிஞ்சுச் சிறுமிகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்து உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் சேகர் (41) என்ற கூலித் தொழிலாளி, கடந்த 2023-ஆம் ஆண்டு இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
தனது பகுதியில் வசித்து வந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டித் தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று, ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இச்சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என அச்சிறுமிகளை ஆனந்த் சேகர் கடுமையாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமிகளின் அன்றாடப் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சிறுமிகளின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த பெற்றோர்கள், அவர்களிடம் அன்பாக விசாரித்தபோது தங்களுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்ணீருடன் விவரித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாளை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த் சேகரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளி ஆனந்த் சேகருக்குத் தூக்குத் தண்டனை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்தத் தூக்குத் தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
"பாலியல் குற்றங்களுக்கு நீதிமன்றம் இரக்கம் காட்டுவது சமூகத்தில் மிகவும் தவறான ஒரு முன் உதாரணமாக மாறிவிடும். குழந்தைகளின் உணர்வுகளை மலிவாகக் கருதிச் செயல்பட்ட இந்தக் குற்றவாளி, தனது மீதி காலத்தைச் சிறையில் சொகுசாகக் கழிப்பதை நீதிமன்றம் ஒருபோதும் விரும்பவில்லை."
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றப் பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட இந்த வழக்குச் சார்ந்த அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருந்தும் குழந்தைகளின் அடையாளங்களை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கடுமையாக உத்தரவிட்டுள்ளனர்.