முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதற்காக சீமான் மீது புகார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உயர் மட்டக் கலந்தாய்வுக் கூட்டத்தில் மேடையில் பேசிய சீமான், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சரான ஸ்ரீநாத் ஆகியோரைச் சுட்டிக்காட்டி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்தப் பொதுக்கூட்ட மேடையில், முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய அரசு செயல்பாடுகள் மற்றும் த.வெ.க. அமைச்சர்கள் ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகள் குறித்துச் சீமான் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து உரை நிகழ்த்தியிருந்தார்.
சீமானின் இந்த எல்லை மீறிய அவதூறு பேச்சு, தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கும் நோக்கில் உள்நோக்கத்துடன் பேசிய சீமான் மீது உடனடியாகக் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.