முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு மீது ரூ.8 கோடி மண் திருட்டு புகார் - அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு!
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் ஆகியோர் மீது ரூ.8 கோடிக்கு மேல் இயற்கை வளக் கொள்ளை மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
2025 டிசம்பர் 14-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டிற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் 1 மீட்டருக்கு மேல் மண் எடுக்கச் சட்டத்தில் அனுமதி இல்லை. ஆனால், எ.வ.வேலு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை சட்டவிரோதமாக மண் அள்ளியதால் அரசுக்கு ₹8 கோடிக்கு மேல் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநாடு நடத்தப்பட்ட 124 ஏக்கர் நிலம், எ.வ.வேலுவின் மகன் குமரனுக்குச் சொந்தமான 'அருணை ப்ராடக்ட்ஸ் & சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு உரியது. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் ஒருவரின் பெயரில் இருந்த இந்த 124 ஏக்கர் நிலம், மிகக் குறைந்த விலைக்கு எ.வ.வேலுவின் மகனால் வாங்கப்பட்டது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அறப்போர் இயக்கம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.