பணப்பட்டுவாடா புகார்.. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீட்டில் அதிகாரிகள் சோதனை!

 

தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான ஆர்.பி. உதயகுமார் இல்லத்தில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று, பணப்பட்டுவாடா குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

மதுரை மாவட்டம், டி. குன்னத்தூர் பகுதியில் உள்ள ஆர்.பி. உதயகுமாரின் இல்லத்தில் அனுமதியின்றி கட்சி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தியதாகவும், அங்கு வாக்காளர்களுக்கு வழங்கப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மேலும், வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பரிசுப் பொருட்கள் அங்குப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இது குறித்த் தகவல் அறிந்ததும், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் ஆர்.பி. உதயகுமாரின் இல்லத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். வீட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். சுமார் சில மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையின் முடிவில், கணக்கில் வராத பணமோ அல்லது வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில் முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் நடந்த இந்தச் சோதனை, மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், "அரசியல் உள்நோக்கத்துடன் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.