அரசு பேருந்து நடத்துனர் துன்புறுத்தல்... பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை!
திருப்பத்தூர் அருகே உள்ள செவ்வாத்தூர்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 54 வயதாகும் இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி 34 வயதான பூர்ணிமா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மகாலிங்கம் தினமும் குடித்துவிட்டு வந்து பணம் கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் பூர்ணிமாவின் பெற்றோர் 500000 ரூபாய் கடன் வாங்கி மருமகனிடம் கொடுத்துள்ளனர். ஆனாலும் திருந்தாத மகாலிங்கம் மீண்டும் பணம் கேட்டு தனது மனைவியை சித்ரவதை செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பூர்ணிமா கடந்த 30 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆசிரியை பூர்ணிமா இறந்த செய்தியை கேட்டு ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் நள்ளிரவில் சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது 2 குழந்தைகளின் எதிர்கால செலவை மகாலிங்கத்தின் குடும்பத்தினர் ஏற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் மகாலிங்கத்தின் சகோதரியும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான சாந்தி என்பவருக்கும் உறவினர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாந்தியை கைது செய்ததை தொடர்ந்து போராட்டம் கலைந்தது