காதல் விவகாரத்தில் மோதல்.. போலீஸ் ஆய்வாளாரை நேரில் சென்று மிரட்டிய தவெக MLA!

 

சென்னையில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பஞ்சாயத்தில், ராயபுரம் காவல் ஆய்வாளருக்கும், த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் தாமுவிற்கும் இடையே காவல் நிலைய வளாகத்திலேயே கடுமையான வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வாலிபர் ஒருவரை கடந்த 8 வருடங்களாக உருகி உருகி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த வாலிபர் பெண்ணை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணுடன் ரகசியமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனை அறிந்த காதலி, இன்று தனது உறவினர்களுடன் திருமண மண்டபத்திற்குச் சென்று, "என்னை ஏமாற்றியவரை வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய விடமாட்டேன்" என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுத் திருமணத்தை நிறுத்தினார். இதனால் அங்குப் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையிலான போலீசார், இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, காவல் நிலைய வளாகத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பேச வந்த நபர் ஒருவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஆய்வாளர் சிதம்பர பாரதி, அந்த நபரின் முகத்தில் பலமாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த நபர், த.வெ.க-வின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் என்பதால், இத்தகவல் காட்டுத்தீ போலப் பரவி, அப்பகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் தாமுவின் கவனத்திற்குச் சென்றது.

இது குறித்து தகவலறிந்தவுடன் ராயபுரம் காவல் நிலையத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் நேரில் விரைந்த த.வெ.க எம்.எல்.ஏ தாமு, காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். "யாரைக் கேட்டுப் பொதுமக்கள் மீது கை வைக்கிறீங்க?, பொதுமக்களை அடிக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?" என எம்.எல்.ஏ தாமு ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதால், இருவருக்கும் இடையே கடுமையான தகராறும், வார்த்தைப் போரும் ஏற்பட்டது. தொடர்ந்து காவல் நிலையத்தின் முன்பாகப் ஏராளமான த.வெ.க தொண்டர்கள் குவிந்ததால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது.

ஆளும் த.வெ.க சட்டமன்ற உறுப்பினருக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையே காவல் நிலையத்திற்குள்ளேயே மோதல் வெடித்த சம்பவம், சென்னை காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.