காங்கிரஸ் வேட்பாளர் மீது கொடூரத் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி... அசாமில் பதற்றம்!

 

126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலச் சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் நடுலார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுபவர் சுனில் குமார் செத்ரி. இவர் நேற்றிரவு தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். கார் நிப்லம் புறநகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு மர்மக் கும்பல் காரை வழிமறித்துள்ளது. அந்த கும்பல் சுனில் குமார் மற்றும் அவரது காரில் இருந்த ஆதரவாளர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது. இதில் கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கொடூரத் தாக்குதலில் சுனில் குமார் செத்ரிக்குத் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட ஆதரவாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியைத் தடுக்க முடியாது என்ற பயத்தில், பாஜகவினர் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜனநாயக நாட்டில் வேட்பாளர் மீதே தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது" என அசாம் காங்கிரஸ் தலைவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார், தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். தப்பியோடிய மர்மக் கும்பலைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், நடுலார் தொகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.