கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்… முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் எம்.பி. சுதா அவசரக் கடிதம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, அத்தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியாகியுள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சுதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் தரக்குறைவான குறுஞ்செய்தி கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதமாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிக்கே இதுபோன்ற தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்திருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் பெண்கள் அச்சமின்றிப் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சுதா வலியுறுத்தியுள்ளார்.