undefined

"காங்கிரஸ் புதுச்சேரியைத் தனிப்பட்ட குடும்பத்தின் ATM ஆகப் பயன்படுத்தியது" - பிரதமர் மோடி

 

புதுச்சேரியில் இன்றுநடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சுமார் ₹1,571 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ரங்கசாமி 'வேல்' பரிசளித்துச் சிறப்பான வரவேற்பு அளித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 74 புதிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பிரதமர் தனது உரையில் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசுகையில், "கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியைத் தனது தனிப்பட்ட குடும்பத்தின் ATM (பண இயந்திரம்) போலப் பயன்படுத்தியது. ஊழலும், நிர்வாகச் சீர்கேடும் மட்டுமே மிஞ்சியிருந்தது" எனக் குறிப்பிட்டார்.

"காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வேகத்தடைகளாக (Speed breakers) மட்டுமே இருந்துள்ளன. அவர்களின் ஆட்சியில் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர். முந்தைய ஆட்சிகளில் நிலவிய குற்றங்கள் அதிகரிப்பு மற்றும் அரசியல் குழப்பங்கள் புதுச்சேரியைப் பின்னோக்கித் தள்ளியதாக தெரிவித்தார்.

புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பிரதமர் முன்வைத்த பேசுகையில், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி (Double Engine Government) இருப்பதால், புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். இந்தியா முழுவதும் உள்கட்டமைப்புக்காக ₹12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். காரைக்கால் NIT-யில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பொறியியல் கட்டிடம் மற்றும் நவீன விடுதி வசதிகள் தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் காற்று மாசைக் குறைக்க மின் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு அதிகரிக்கப்படும். 2047-ஆம் ஆண்டிற்குள் புதுச்சேரியை முழுமையாக வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. மருத்துவச் சிகிச்சைகளுக்காகப் பிற மாநிலத்தவர்கள் புதுச்சேரியைத் தேடி வரும் நிலையை உருவாக்குவோம்" என்று பிரதமர் உறுதி அளித்தார்.