பிரவீன் சக்கரவர்த்தி அரசியல் ஆருடம்...   தவெக உடன்  காங்கிரஸ் 20 ஆண்டு கால ஒப்பந்தம்?!

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. நீண்ட காலமாக திமுக கூட்டணியில் நீடித்து வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது அதிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக அதன் மூத்த தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்த முடிவானது தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த ஆதரவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே 20 ஆண்டு கால நீண்ட கால கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தத் திடீர் திருப்பத்தால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தவெகவின் பலம் தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள இடங்களைப் பெற மற்ற சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. பிரவீன் சக்ரவர்த்தி ஏற்கனவே விஜய் அவர்களைச் சந்தித்துப் பேசியது குறித்து கட்சிக்குள் சில அதிருப்திகள் நிலவியது. இருப்பினும், தற்போது தலைமை எடுத்துள்ள இந்த அதிரடி முடிவானது ஆட்சிக் கட்டிலில் அமரத் துடிக்கும் விஜய்க்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.