ஆட்சியைக் கவிழ்க்க சதி.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்... சுற்றி வளைக்கும் போலீசார்!

 

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க, அக்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க ரூ.180 கோடி மதிப்பில் அரசியல் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியாகி உள்ள விபரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை போலீசார் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் விடுத்துள்ளனர்.

தவெக கட்சியின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "தற்போது நடைபெற்று வரும் தவெக ஆட்சியைத் திட்டமிட்டுக் கவிழ்ப்பதற்காக, திமுக தரப்பிலிருந்து சிலர் என்னைத் தொடர்பு கொண்டு, கட்சியை விட்டு வெளியேற ரூ.35 கோடி தருவதாகப் பேரம் பேசினர்" என்று டாக்டர் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.

எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் உடனடியாக களமிறங்கிய சென்னை போலீசார், தீவிரப் புலனாய்வு நடத்தித் திரைக்குப் பின்னால் இருந்த 8 பேரை நள்ளிரவில் கைது செய்தனர். ஐ.பி.டி.எஸ். என்ற பிரபல தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முக்கிய ஆதரவாளர்களான தியாகராஜன் (மேடவாக்கம்), நரேஷ் (பெசன்ட் நகர்), ரமேஷ், கார்த்தி (கரூர்), செல்வன் (பள்ளிக்கரணை), ராஜேஷ் (அஸ்தினாபுரம்) மற்றும் மணப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சீனிவாசன் ஆகிய 8 பேர் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தவெக ஆட்சியை முற்றிலும் முடக்குவதற்காகப் பல தவெக எம்.எல்.ஏ-க்களை மொத்தமாக விலைபேசி இழுக்க ஒட்டுமொத்தமாக ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்ற  வாக்குமூலத்தை அளித்துள்ளனர்.

இந்த சதித்திட்டத்தின் முக்கியப் பின்னணியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னை தனிப்படை போலீசார் இன்று கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குச் சென்று, நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி சம்மன் வழங்கினர். இந்தச் சம்மனை செந்தில் பாலாஜியின் தந்தை பெற்றுக் கொண்டார்.

வரும் திங்கட்கிழமை ஜூலை 6ம் தேதி சென்னை போலீஸ் தலைமையகத்தில் விசாரணை அதிகாரியின் முன்னிலையில் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மன் வழங்கப்பட்ட அதே வேளையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தங்களது இருப்பிடங்களில் இல்லாமல் தலைமறைவாக உள்ளதாகத் திருவல்லிக்கேணி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பியோடுவதைத் தடுக்கும் பொருட்டு, சென்னை போலீசாரின் வேண்டுகோளின்படி குடியுரிமை அதிகாரிகள் அவர்கள் இருவர் மீதும் உடனடியாக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.