கட்டுமான பொருட்கள் விலை குறைய வாய்ப்பு...  வெளிமாநிலங்களுக்குக் கனிமப் பொருட்கள் கொண்டு செல்லத் தடை!

 

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்குக் கனிமப் பொருட்களைக் கொண்டு செல்ல அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவால் மாநிலத்திற்குள் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு பெருமளவில் குறையும் எனக் கருதப்படுகிறது. உள்ளூர் சந்தைகளில் கனிம வளங்கள் தாராளமாகக் கிடைக்கத் தொடங்குவது வளர்ச்சிப் பணிகளுக்குப் பெரும் பக்கபலமாக அமையும்.

இந்தத் தடையின் காரணமாகத் தமிழகத்தில் வீடு, கட்டிடம் மற்றும் சாலைப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் சீராகக் கிடைக்கும். குறிப்பாக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அத்தியாவசியமான ஜல்லி, எம்-சாண்ட் மற்றும் கருங்கல் ஆகியவை தடையின்றி மக்களுக்குச் சென்றடையும். பொருட்களின் விநியோகம் சீரடைவதன் மூலம் கட்டுமானப் பொருட்களின் தேவையற்ற விலை உயர்வு முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

இதன்  பயனாக மாநிலத்தில் நடைபெற்று வரும் அனைத்து வகையான கட்டுமானச் செலவுகளும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.முன்னதாகத் தமிழகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,200 முதல் 1,500 லாரி லோடுகள் வரை கனிமப் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதில் கேரளா மாநிலத்திற்கு மட்டும் தினமும் சுமார் 1,000 லாரிகளில் கனிமப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமளவிலான வளங்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்றதால் மாநிலத்தில் கடுமையான தட்டுப்பாடும் விலை உயர்வும் நிலவி வந்தது.