undefined

இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை... தமிழகம் வந்தடைந்தார் தேர்தல் ஆணையர்!

 

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் இன்று சென்னையில் அரசியல் கட்சிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்கின்றனர். மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ள சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று தனித்தனியாகச் சந்திக்கிறார். தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவது குறித்து அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அவர் கேட்டறிகிறார். நாளை (பிப். 27) மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்கள் மற்றும் ஐ.ஜி-க்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வாக்குச் சாவடி ஏற்பாடுகள், பாதுகாப்புப் பணிகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விவாதிக்கப்படும்.

பண விநியோகத்தைத் தடுத்தல் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தற்போது 5.67 கோடி வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் பணிக்காக ஏற்கனவே 1,444 அதிகாரிகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் முதற்கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இறுதி கட்டத் தயார் நிலையை ஆய்வு செய்யவே இந்தக் குழு சென்னை வந்துள்ளது. புதுச்சேரியில் நேற்று ஆய்வுகளை முடித்த தேர்தல் ஆணையக் குழு, இன்று சென்னையில் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. ஆலோசனைகளுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதி குறித்த மறைமுகக் குறிப்புகளை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.