ரயில் 4 மணிநேரம் தாமதமானதால் தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

 

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்முவிலிருந்து டெல்லி சென்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் 4 மணி நேரம் தாமதமாகச் சென்றதால், இணைப்பு விமானப் பயணத்தைத் தவறவிட்ட மோகித் – தாமினி தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு வழங்குமாறு இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு ஜம்மு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மூடுபனி காரணமாகவே ரயில் தாமதமானதாக ரயில்வே தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தைத் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் ஆணையம் நிராகரித்துள்ளது.

கடந்த 2022 டிசம்பரில் ஜம்முவிலிருந்து டெல்லிக்குச் செல்வதற்காக மோகித் – தாமினி தம்பதியினர் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். டெல்லி சென்றடைந்த பிறகு அங்கிருந்து அடுத்த கட்டப் பயணத்திற்கான விமான டிக்கெட்டையும் அவர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக டெல்லியைச் சென்றடைந்ததால், அவர்களால் திட்டமிட்டபடி விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போனது. இதன் காரணமாக, வேறு வழியின்றிப் புதிய விமான டிக்கெட் முன்பதிவு செய்யவும், டெல்லியில் தற்காலிகமாக ஹோட்டல் அறை எடுத்துத் தங்கவும் அத்தம்பதியினருக்கு ரூ.38,199 கூடுதலாகச் செலவானது.

இந்த சேவைக் குறைபாடு குறித்து மோகித் – தாமினி தம்பதியினர் ஜம்மு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தனர். விசாரணையின் போது, வட இந்தியாவில் நிலவிய கடும் மூடுபனி காரணமாகவே ரயில் தாமதமானதாகவும், இது இயற்கைச் சூழலால் ஏற்பட்டது என்றும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், மூடுபனியால்தான் குறிப்பிட்ட அந்த ரயில் தாமதமானது என்பதை நிரூபிக்கும் வகையிலான போதிய ஆவணங்களையோ, வானிலை அறிக்கை ஆதாரங்களையோ ரயில்வே நிர்வாகம் தாக்கல் செய்யவில்லை.

ரயில்வேயின் விளக்கத்தை நிராகரித்த நுகர்வோர் ஆணையம், ரயில் தாமதத்தால் தம்பதியினருக்கு ஏற்பட்ட கூடுதல் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் செலவான ரூ.38,199-ஐத் திருப்பி வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்குச் செலவுகளுக்காகக் கூடுதலாக ரூ.25,000 சேர்த்து, மொத்தம் ரூ.63,199 இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.