மரண குழி... மேலப்பாளையம் - அம்பை சாலையில் தொடரும் விபத்து அபாயம் !
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் - அம்பை சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட ராட்சத குழிகளால் பொதுமக்களுக்கு பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தெற்கு புறவழிச்சாலை முதல் மேலப்பாளையம் சந்தை முக்கு வரை சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அங்கு பெரிய பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இதற்காக சாலையோரம் தோண்டப்பட்ட குழிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மேலப்பாளையம் குடிநீர் தொட்டி அருகே தோண்டப்பட்ட குழியால் பிரதான குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் தேங்கி நிற்பது அப்பகுதியை ஒரு மரணக் குளம் போல மாற்றியுள்ளது.
இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குழி இருப்பதை அறியாமல் விழுந்து காயமடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இப்பகுதியானது எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடம் என்பதால், தேங்கி நிற்கும் தண்ணீராலும், ஆழமான குழிகளாலும் பாதசாரிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மின் கம்பங்கள் மாற்றப்பட்டு பணிகள் நடந்தாலும், குடிநீர் குழாய் உடைப்பைச் சீரமைக்காமல் நாட்கணக்கில் தண்ணீர் வீணாவது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் காஜா, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமாருக்கு அவசரக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், விபத்துகளைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றி, சாலை விரிவாக்கத்திற்காகத் தோண்டப்பட்ட குழிகளை விரைவாகவும் முறையாகவும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.