தொடரும் சோதனை.. பெங்களூரில், நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் 132 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், பயன்பாட்டிற்கு ஒவ்வாத கெட்டுப்போன உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவில் இயங்கி வரும் முன்னணி நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் கெட்டுப்போன இறைச்சி மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் வந்தன.

பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நகரின் பல்வேறு இடங்களில் இயங்கும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரம் இன்றிப் பல நாட்கள் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த 132 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பலமுறை சூடாக்கி மீண்டும் பயன்படுத்தப்பட்ட 15 லிட்டர் சமையல் எண்ணெய் கண்டறியப்பட்டது. சமையலுக்குப் பயன்படுத்த வைத்திருந்த கெட்டுப்போன பால் மற்றும் அழுகிய காய்கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுகளைத் தயாரித்த பிரபல ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், தவறு செய்த நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.