தமிழகத்தில் அடுத்தடுத்து பயங்கரம்... ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தாக்கில் 12 வயது சிறுமி சடலமாக மீட்பு!

 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிகள் கடத்தப்படுவதும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுமாக தமிழகம் முழுவதுமே அதிகளவில் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் 40 நாட்களைக் கடந்த பின்னும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அடுத்தடுத்து சிறுமிகளுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் மலைப்பாதையில் உள்ள வழுக்குப்பாறை பகுதியில், சாலையோரம் சுமார் 15 அடி பள்ளத்தில் 12 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்காடு  மலைப்பகுதி வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த சிறுமி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் உடலை அங்கு வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஏற்காடு அடிவாரம் மற்றும் குப்பனூர் சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காபி தோட்டங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை அடையாளம் காணும் வகையில் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் மற்றும் உடை விவரங்களுடன் புகைப்படம் வெளியிடப்பட்டு, அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது