சர்ச்சை வீடியோ... வலுக்கும் எதிர்ப்புகள்... ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஷூ அணிந்து ஏறிய அமைச்சர் ரமேஷ்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவிலின் கோபுரத் திருப்பணிகளைப் பார்வையிடச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், காலில் ஷூ அணிந்துகொண்டு கோபுரத்தில் ஏறிய சம்பவம் பக்தர்கள், ஆன்மிக அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் கிழக்குக் கோபுரத் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வருகை புரிந்தார். ஆய்வின் போது, அமைச்சர் ரமேஷ் தனது காலில் ஷூ அணிந்தவாறே கோபுரத்தின் மீது ஏறிச் சென்று பார்வையிட்டுள்ளார். அமைச்சருடன் சென்ற கோயில் உயர் அதிகாரிகள், தவெகவினர் மற்றும் பலர், ஸ்ரீரங்கம் கிழக்குக் கோபுரத்தின் கிருஷ்ணர் சன்னதி அமைந்த பகுதிக்கு மேல் தளத்திலும் காலணிகளுடன் உலா வந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கோபுரத்தின் மீது அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஷூ அணிந்துகொண்டு நடமாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலின் கிழக்கு கோபுரத் திருப்பணியை ஆய்வு செய்யச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை #TVK அமைச்சர் எஸ். ரமேஷ் அவர்கள், காலில் ஷூ அணிந்து கொண்டு கோபுரத்தில் ஏறியது சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. pic.twitter.com/jI6tfbYSr4
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) July 28, 2026
புனிதமான திருக்கோயிலின் கோபுரப் பகுதிக்கு மேலேயும், சன்னதிக்கு மேலுள்ள தளத்திலும் காலணிகளுடன் சென்றது கோயில் புனிதத்தைக் கெடுக்கும் செயல் எனப் ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இறை நம்பிக்கை மற்றும் கோயில் மரபுகளைக் காயப்படுத்தியதற்காக அமைச்சர் ரமேஷ் பகிரங்கமாகப் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பின் எக்ஸ் பக்கத்தில் கண்டனப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
"108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் கோபுரத் திருப்பணியினைப் பார்வையிடச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்கள், காலணி அணிந்து சென்று அரங்கநாதனை இழிவுபடுத்தியதையும், அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களை அவமதித்ததையும் இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
அமைச்சரின் இச்செயல் திட்டமிட்ட அலட்சியப் போக்கா அல்லது கவனக்குறைவா எனப் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், இச்சர்ச்சை தமிழக அரசியல் மற்றும் பக்தர்களிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.