பதவியேற்பு விழாவில் சர்ச்சை... மீண்டும் 'தமிழ்த்தாய் வாழ்த்து' அவமதிப்பு - எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு!

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான 'மக்கள் மாளிகையில்' இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க விழாவின் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுப் பாடப்பட்டதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் புதிய அமைச்சர்கள் 23 பேர் இன்று காலை 10 மணிக்கு மக்கள் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த அதிகாரப்பூர்வ விழாவின் தொடக்கத்தில், தமிழக அரசின் வழக்கமான நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுவாகத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விழாக்களின் தொடக்கத்தில் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழாவின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவதுதான் மரபு. ஆனால், இன்றைய விழாவில் முதலாவதாக 'வந்தே மாதரம்' பாடலும், இரண்டாவதாக 'தேசிய கீதமும்' பாடப்பட்டுள்ளன. அதன் பின்னரே, மூன்றாவதாகத் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்பட்டுள்ளது.

கடந்த மே 10-ம் தேதி முதலமைச்சராக விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்ற விழாவின் போதும், இதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் விவகாரத்தில் குளறுபடிகள் நடந்து, அது அவமதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன. அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

"மாநிலத்தின் சுயமரியாதை மற்றும் மொழிப் பெருமையின் அடையாளமாக இருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை, ஆளுநர் மாளிகை திட்டமிட்டே பின்னிலைக்குத் தள்ளுகிறதா? இதற்குப் புதிய தவெக அரசு ஏன் மௌனம் காக்கிறது?" என்று எதிர்க்கட்சிகள் தங்களின் கண்டனக் குரல்களை எழுப்பத் தொடங்கியுள்ளன. இதனால் பதவியேற்பு விழா முடிந்த கையோடு, இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.