வேட்பாளர் அறிவிப்பால் வெடித்த சர்ச்சை... முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், நாமக்கல் தொகுதியில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது தெருவுக்கு வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியின் தூண்டுதலால் தகுதியற்ற வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ-வும், தற்போதைய மாநகரச் செயலாளருமான கே.பி.பி. பாஸ்கர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சித் தலைமை ஆச்சரியப்படும் விதமாக அதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ். மோகனை வேட்பாளராக அறிவித்தது.
இந்த அறிவிப்பால் ஆத்திரமடைந்த கே.பி.பி. பாஸ்கர் தலைமையில், ஒன்றியச் செயலாளர்கள் கோபி, செல்வகுமார், ராஜா ரகுமான் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மயில் என். சுந்தரம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பள்ளிபாளையம் அருகே உள்ள தங்கமணியின் வீட்டை முற்றுகையிடச் சென்றனர். தங்கமணி வீட்டில் இல்லாத சூழலில், அங்குத் திரண்ட தொண்டர்களைக் காவல் துணை கண்காணிப்பாளர் கௌதம் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுப் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர், "நாமக்கல் தொகுதிக்கு ஸ்ரீதேவி பி.எஸ். மோகனை வேட்பாளராக அறிவித்தது அதிர்ச்சியளிக்கிறது. இது முழுக்க முழுக்க தங்கமணியின் தூண்டுதலால் நடந்த சதி. அவர் தொடர்ந்து நாமக்கல் தொகுதியைப் புறக்கணித்து வருகிறார். அதிமுகவின் எதிர்காலம் காக்கப்பட வேண்டுமெனில், நாமக்கல் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். இது குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.
தங்கமணியின் வீடு பூட்டப்பட்டிருந்ததால், நிர்வாகிகள் மீண்டும் நாமக்கல் திரும்பினர். அங்கு முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் மாற்றப்படுவாரா அல்லது பாஸ்கர் தரப்பினர் அதிருப்தி வேட்பாளராகக் களம் இறங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதால், நாமக்கல் அதிமுகவில் பதற்றம் நீடிக்கிறது.