undefined

விடுதி அறையில் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - சமையலர் சில்மிஷம்!

 

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள பள்ளி விடுதியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சமையலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாணவியர் விடுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விடுதியில் தங்கி அதே பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த 24-ம் தேதி தன்னைப் பார்க்க வந்த தாயாரிடம் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார். விடுதி சமையலர் தன்னிடம் மட்டுமன்றி, அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட மாணவிகளிடமும் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் அந்த மாணவி அழுது கொண்டே கூறியுள்ளார்.

மாணவியின் தாயார் இது குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டார். பள்ளி நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சமையலர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, கேளம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டம் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (44) என்பது உறுதியானது. அவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

பெற்றோரைத் தள்ளி இருந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஊழியரே இத்தகைய செயலில் ஈடுபட்டது கோவளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.