வீட்டில் மாட்டிறைச்சி சமைத்த விவகாரம்... 3 பெண்கள் அதிரடி கைது!
உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சி சமைக்கப்படுவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் பெண் காவலர்கள் உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர் குறிப்பிட்ட அந்த வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்த ஆண்கள் நான்கு பேர் சந்து பொந்துகள் வழியாகத் தப்பியோடினர்.
வீட்டிற்குள் இருந்த முப்பது வயது மதிக்கத்தக்க மூன்று பெண்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது பெண் காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அந்த வீட்டில் நடத்திய சோதனையில் சமைத்த இறைச்சி ஒரு கிலோ மற்றும் சமைக்காத பச்சையிறைச்சி ஒரு கிலோ ஆகியவை அடங்கிய பைகள் கைப்பற்றப்பட்டன. பிடிபட்ட பெண்களிடம் நடத்திய விசாரணையில், குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் வெளியில் இருந்து அந்த இறைச்சியைக் கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த மூன்று பெண்கள் மீதும் சராய் அகில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட இறைச்சி மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய ஆண்களைக் காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.