கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்வு.. யார் யாருக்குப் பொருந்தும்?!
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தங்கத்தின் தற்போதைய சந்தை விலை உயர்விற்கேற்ப பொதுமக்கள் கூடுதல் கடன் பெற ஏதுவாகக் கூட்டுறவுத் துறை இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இனி கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் புதிதாக நகைக்கடன் கோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும்.
ஏற்கனவே நகைக்கடன் பெற்று, தற்போது தங்களது கடனைப் புதுப்பிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த உயர்த்தப்பட்ட புதிய கடன் உச்சவரம்பு முழுமையாகப் பொருந்தும் எனக் கூட்டுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள 10,368 சங்கங்கள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு அமைப்புகளில், இதற்கு முன்பு நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது கிராமுக்கு ரூ.7,000 (இவற்றில் எது குறைவோ) என்ற அடிப்படையில் கடன் வழங்கப்பட்டது. தற்போது அந்த உச்சவரம்பு கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குப் பலன்: சமீபகாலமாக ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பழைய வரம்பின்படி குறைவான தொகையே கிடைத்து வந்ததால் பலரும் தனியார் நிதி நிறுவனங்களை நாடும் நிலை இருந்தது. தற்போது கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதோடு, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடையிலான வட்டி மற்றும் லாப வரம்பும் சீரமைக்கப்பட்டுள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமே எளிதாகவும் பாதுகாப்பாகவும் அதிக கடன் தொகையைப் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.