ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த போலீஸ்காரர் தூக்கிட்டுத் தற்கொலை!
சென்னையில் ஆன்லைன் விளையாட்டில் பெருமளவு பணத்தை இழந்து, கடனில் மூழ்கிய விரக்தியில் ஆயுதப்படைப் போலீஸ்காரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்வநாத் (27) என்பவர், சென்னை கே.கே. நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவுப் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தார். இவர் பரங்கிமலை தண்டுமா நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி, ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு விஷ்வநாத்தைப் பார்க்க அவரது நண்பர்கள் அறைக்குச் சென்றபோது, அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பரங்கிமலைக் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், விஷ்வநாத் ஆன்லைன் விளையாட்டுகளில் தொடர்ந்து பணத்தை இழந்து வந்ததாகவும், அதற்காக நண்பர்கள் மற்றும் பலரிடம் கடன் வாங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. கடன் சுமையால் ஏற்பட்ட தீவிர மன உளைச்சல் காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் பரங்கிமலைக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.