பேட்ஜைக் கழற்றி எறிந்து காவலர் ராஜினாமா - மாணவர் போராட்ட மேடையில் ஆதரவு தெரிவித்து நெகிழ்ச்சி!

 

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தீவிரமாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டக் களத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துத் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியைச் சேர்ந்த செர் சிங் என்ற காவலர், டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சீருடையில் நேரில் வந்தார். போராட்ட மேடையில் பேசிய அவர், "இது பகத் சிங்கின் தேசம்; புரட்சி என்பது குண்டுகளாலோ அல்லது துப்பாக்கிகளாலோ வருவதில்லை. புரட்சி என்பது சிந்தனைகளில் இருந்து பிறக்கிறது, சிந்தனைகள் என்றும் இறப்பதில்லை. இந்த ரவுடிகளை நாம் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்" என்று ஆவேசமாகப் பேசினார். உரையின் முடிவில், தன் காவலர் சீருடையில் இருந்த அதிகாரப்பூர்வ அடையாள சின்னமான பேட்ஜைக் கழற்றி மேடையிலேயே வீசினார்.

மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்குத் தன் ஆதரவைப் பதிவு செய்யும் வகையில், தனது ராஜினாமா கடிதத்தை சி.ஜே.பி. தலைவர் அபிஜீத் தீப்கேவிடம் நேரில் வழங்கினார். இந்தச் சம்பவம் போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஊடகங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலரின் இந்த நடவடிக்கை குறித்து உத்தரகாண்ட் மாநிலக் காவல் துறை உயர் அதிகாரிகள் முக்கிய விளக்கமளித்துள்ளனர்:

காவலர் செர் சிங் கடந்த ஜூன் 28-ம் தேதி முதலே எவ்வித தகவலுமின்றிப் பணிக்கு வரவில்லை என்பதால், அவர் ஏற்கனவே ஜூலை 20-ம் தேதியே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். மேலும், அவர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறை சென்று, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.