ஒடிசாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மேலும் 2 பேருக்குத் தொற்று உறுதி!
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் புதிதாக மேலும் 2 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் மீண்டும் தொற்றுப் பரவல் குறித்த அச்சம் எழுந்துள்ளது.
கஞ்சம் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்குக் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் உடனடியாகத் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிகிச்சையில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், பயப்படத் தேவையில்லை என்றும் ஒடிசா சுகாதாரத் துறைத் தெளிவுபடுத்தியுள்ளது. தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டுப் பாதுகாப்பாகக் கழுவுவது உள்ளிட்ட அடிப்படை சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.