முதல்வர் விஜய்யின் புகைப்படங்களை வாங்கியதில் ஊழல்... உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப்பதிவு!
கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை ரூபாய் 800-க்கு வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பால்ராஜ் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜி மீது குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் புகைப்படத்தின் சந்தை மதிப்பை விடக் கூடுதல் தொகை குறிப்பிட்டு ஊழல் செய்துள்ளதாகவும், முறைகேடுகளில் ஈடுபடாத ஊழியர்களை மிரட்டி கமிஷன் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊழல் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் விசாரணை நடத்தக் கோரி அளித்த மனுவை, குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியே விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. உயரதிகாரி மீதான குற்றச்சாட்டை அவருக்கு கீழ் பணிபுரியும் அலுவலர் எப்படி நேர்மையாக விசாரிப்பார் என்ற கேள்வியையும் மனுவில் முன்வைத்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அந்தந்த பகுதிகளில் அதிகாரிகளை நியமித்து இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான முழுச் செலவு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.