ரூ.64 ஆயிரத்திலிருந்து ரூ.68,500 ஆக உயர்ந்த பருத்தி விலை; ஜவுளித்துறைக்கு நெருக்கடி

 

 

தமிழகத்தில் பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நூற்பாலைகளின் உற்பத்திச் செலவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவை சுற்றுவட்டாரத்தில் செயல்படும் நூற்பாலைகள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் ஒரு கேண்டி பருத்தியின் விலை ரூ.4,500 வரை அதிகரித்து, ரூ.64,000-ல் இருந்து ரூ.68,500 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கேண்டி என்பது 355.62 கிலோ பருத்தியைக் குறிக்கும். புதிய பருத்தி சந்தைக்கு வருவது குறைவாக இருப்பது, விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் பருத்தியை இருப்பு வைப்பது உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வதாக இந்திய பருத்தி கூட்டமைப்பு செயலாளர் நிஷாந்த் ஆஷர் தெரிவித்துள்ளார். இறக்குமதி வரி விலக்கு அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவடைவதும் தொழில்துறையினரின் கவலையை அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் பருத்தி உற்பத்தி குறையும் நிலையில், இறக்குமதி வரி மீண்டும் விதிக்கப்பட்டால் சர்வதேச சந்தையில் போட்டியிடுவது கடினமாகும் என ஜவுளித்துறையினர் கூறுகின்றனர். எனவே, பருத்தி விவசாயிகளின் நலனையும் ஜவுளித்துறையின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, இறக்குமதி வரி தொடர்பாக மத்திய அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.