பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே இனி இருமல் மருந்து!
இந்தியாவில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் இருமல் மருந்து உள்ளிட்ட திரவ வடிவ மருந்துகளை விற்பனை செய்வது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய கடுமையான உத்தரவு ஒன்றை தற்பொழுது பிறப்பித்துள்ளது. அதன்படி தகுதிவாய்ந்த அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள் தங்களின் பரிந்துரை சீட்டில் எழுதிக் கொடுத்தால் மட்டுமே மருந்தகங்கள் இனி பொதுமக்களுக்கு இருமல் மருந்துகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தரம் குறைந்த மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த கலப்பட இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 பச்சிளம் குழந்தைகள் வரை அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, மருந்து விற்பனையில் நிலவும் முறைகேடுகளைத் தடுக்கவும், குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்கவும் மத்திய அரசு இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அரசின் இந்த புதிய விதிமுறையை இந்தியாவில் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய மருந்தகங்களும் எவ்வித விதிவிலக்கும் இன்றி மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் முறையான பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.