மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்... மொத்தம் 72,627 பேர் விண்ணப்பம்!

 

நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை தொடங்கி நடைபெறும் என்று மத்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளின் கலந்தாய்வில் பங்கேற்க tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி பல்வேறு கட்டங்களாக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் 72 ஆயிரத்து 627 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பட்டியலை மத்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அளவிலான கலந்தாய்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான 4 கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் அக்டோபர் 10-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு மாநிலத்திற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.