தம்பதியை வழிமறித்து கணவன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி!

 

மத்திய பிரதேச மாநிலத்தில், கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிய தம்பதியை வழிமறித்து, கணவன் கண்முன்னே பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள காதேர் கிராமத்திற்கு அருகே, கடந்த வியாழக்கிழமை இரவு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அவர்களின் வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து, கணவனைத் தாக்கி பிணையாகப் பிடித்துக் கொண்டு, அவரது கண்முன்னேயே பெண்ணைப் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தம்பதியினரின் கூச்சலைக் கேட்டு, அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளும் உள்ளூர்வாசிகளும் அங்கு திரண்டு வரத் தொடங்கினர். ஆட்கள் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளைப் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நெடுஞ்சாலையில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.