அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்! 10,000 புதிய பேருந்துகள்! திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் அதிரடி!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகள் மற்றும் மாணவர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் முன்னெப்போதும் இல்லாத அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கையில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாக இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் திட்டம் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகள் தங்களுக்குத் தேவையான வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக ரூ.8,000 மதிப்பிலான சிறப்புப் பொருட்கள் வாங்கும் கூப்பன் வழங்கப்படும். இது குடும்பத் தலைவிகளின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன்:
விவசாயம்: நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
மீனவர்கள்: மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000-லிருந்து ரூ.12,000 ஆகவும், மீன்பிடி குறைவு கால நிவாரணம் ரூ.6,000-லிருந்து ரூ.9,000 ஆகவும் உயர்த்தப்படும்.
மாணவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு:
இலவச லேப்டாப்: உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு மீண்டும் இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
புதிய நகரங்கள்: திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மாநகராட்சிகளுக்கு அருகே உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய புதிய செயற்கைக்கோள் நகரங்கள் உருவாக்கப்படும்.
ஆன்மீகம் மற்றும் கலை:
கோயில் திருப்பணிகள்: தமிழகம் முழுவதும் சுமார் 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும்.
பூங்காக்கள்: மாநிலம் முழுவதும் 50 புதிய செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
மொழிப் போர் தியாகிகள்: பொள்ளாச்சியில் மொழிப் போராட்டக் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.
தொழில் மற்றும் விளையாட்டு:
தொழில் கடன்: பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினர் சுயதொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்.
விளையாட்டு: அனைத்து மாவட்டங்களிலும் நவீன உள்விளையாட்டரங்கங்கள் மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.