undefined

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வைகோவின் வழக்கு தள்ளுபடி - நீதிமன்றம் உத்தரவு!

 

1992-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, 2012-ம் ஆண்டு வைகோ இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

"விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் மற்றும் அனுதாபி என்ற அடிப்படையில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளேன். அந்த இயக்கம் இந்தியாவுடன் தமிழீழத்தை இணைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை. எனவே, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது" என்று வைகோ வாதிட்டார்.

"மத்திய அரசின் தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் அமைப்பு எந்த வழக்கையும் தொடரவில்லை. அவர்களே தடையை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், மூன்றாம் நபரான வைகோ இதற்கு எதிராக வழக்கு தொடர முடியாது. மேலும், 2014, 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட புதிய தடை உத்தரவுகளை அவர் எதிர்க்கவில்லை" எனச் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுதிர்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. "தற்போது 2024-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுதான் அமலில் உள்ளது. 2012-ம் ஆண்டு வைகோ எதிர்த்த அந்தத் தடை உத்தரவு ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. எனவே, காலாவதியான ஒரு உத்தரவின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல" என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நான் எப்போதுமே விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் தான். உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக எனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுப்பேன். பல ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் நான் தோல்வி அடையவில்லை" என்று தெரிவித்தார். தற்போது இந்தியாவில் 2024-ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.