கொலை வழக்குக் குற்றவாளிக்குத் திருமணம் செய்ய 12 மணி நேரம் பரோல் வழங்கி நீதிமன்றம்  உத்தரவு!

 

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கொலை வழக்குக் கைதி ஒருவர், தனது கம்போடிய இணையரைத் திருமணம் செய்து கொள்வதற்காக நீதிமன்றத்திடம் சிறப்பு அனுமதி பெற்று 12 மணி நேர பரோலில் வெளியே வந்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஹரியானாவின் ஜஜ்ஜார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெயின்பால் தில்லா என்ற கொலை வழக்குக் கைதி, தனது கம்போடிய நாட்டு இணையரைத் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்ள விரும்பி நீதிமன்றத்தை அணுகினார். இதனைக் பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேரச் சிறப்புப் பரோல் வழங்கி உத்தரவிட்டது.

கடந்த 2018-ம் ஆண்டில் போலி பாஸ்போர்ட் மூலம் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்று கம்போடியாவில் கைது செய்யப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டவர் மெயின்பால். அங்கு வாழ்ந்த காலத்தில் அவர் மெட்டா சான் என்பவருடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்கு நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

சிறைக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் மிக எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், பரோல் காலம் முடிந்தவுடன் மீண்டும் வழக்கம்போலச் சிறையில் அடைக்கப்பட்டார்.