முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் உத்தரவு!

 

பெரியார் திராவிடர் கழகக் கூட்டத்தில் மதம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

2025-ல் சென்னையில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழகக் கூட்டத்தில் பங்கேற்ற பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்துப் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இதன் விளைவாக அவர் தனது அமைச்சர் பதவியையும் இழக்க நேரிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராகத் தனிநபர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கான ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கைத் ரத்து செய்யக் கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் ஜூலை 2ம் தேதியன்று தள்ளுபடி செய்தார். உமா ஆனந்தனின் மனு மீதான விசாரணையை 6 மாதங்களுக்குள் நடத்தி முடிக்குமாறு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.