undefined

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

 

கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்துச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் விவாதங்களை உருவாக்கியது.

பொன்முடியின் பேச்சு மத ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, பின்னர் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்திரபாண்டியன், புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மார்ச் 24ம் தேதி நடைபெறும் விசாரணையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டப் போராட்டங்களைச் சந்தித்து வரும் பொன்முடிக்கு, இந்த 'வெறுப்புப் பேச்சு' தொடர்பான வழக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.