திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

 

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 18-ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகவும், மிரட்டும் தொனியில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ-வைக் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.சுபாதேவி, மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி மார்க்கண்டேயன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்து, அதன் தீர்ப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.