ரூ 20?! பழைய குற்றாலம் அருவியில் குளிக்கக் கட்டணம்... பொதுமக்கள் அதிர்ச்சி!
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பழைய குற்றாலம் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நபருக்கு 20 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என வனத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்க உள்ள நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய 'வண்ணப்பூரணி சுற்றுச்சூழல் சுற்றுலா குழு' மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அருவிப் பகுதிக்குச் செல்ல வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்குத் தனியாக 10 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும் நோக்கில், அருவியில் குளிக்கும் போது சோப்பு, ஷாம்பு, எண்ணெய் மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வனத்துறை முற்றிலும் தடை விதித்துள்ளது. மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அருவிப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நுழைவு வாயிலில் அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வாகனங்கள் சுற்றுலாப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால், ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணிக்கத் துப்பாக்கி ஏந்திய வனக்காவலர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இயற்கை அழகைப் பாதுகாக்கவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.