குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள பிரதான அருவி மற்றும் ஐந்தருவி உட்பட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது. மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவானது. இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அதிகாரிகள் உடனடியாகத் தடை விதித்தனர்.
விடுமுறை நாட்களை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குற்றாலத்திற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தத் தடையால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் அருவிகளுக்குச் செல்லும் பாதைகளைத் தடுப்புகள் அமைத்து மூடியுள்ளனர். பயணிகள் யாரும் ஆபத்தான முறையில் அருவிப் பகுதிக்குள் செல்லாதவாறு கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து சீரான நிலைக்குத் திரும்பிய பிறகே சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிருவாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மாற்றங்கள் மற்றும் நீரோட்டத்தின் தன்மையைக் காவல் துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.